ராணுவத்திற்கு நேரடி ஆட்சேர்ப்பு முகாம்
கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மாவட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் வகையில் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் பிப்ரவரி 10-ந் தேதி தொடங்குகிறது. இந்த முகாம் பிப்ரவரி 26-ந் தேதி வரை 17 நாட்கள் நடக்கிறது. ராணுவத்தில் காலியாக உள்ள தொழில்பிரிவு, உதவி செவிலியர், கால்நடை பராமரிப்புக் கான உதவி செவிலியர், எழுத்தர், பொருட்கள் பாதுகாவலர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய இந்த தேர்வு தற்போது நடைபெறுகிறது.
இந்த பணிகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் ஜனவரி 25-ந் தேதிக்கு பிறகு இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டை பெற்றுக்கொள்ளலாம். ஆட்கள் தேர்வு திருவண்ணாமலையில் உள்ள அருணை என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் எந்த தேதியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.
ஒரே நாளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஒருநாளைக்கு 500 பேர் கலந்து கொள்ளும் வகையி்ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்து மேலும் தகவல் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் சென்னையி்ல் உள்ள ராணுவ வேலைவாய்ப்பு அலுவலகத்தை 044-25674924 மற்றும் 044-25674925 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு நடைமுறை நேர்மையான முறையில் வெளிப்படையாக நடைபெறும். தேர்வில் பங்கேற்கவோ அல்லது ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாகவோ யாரேனும் கூறினால் அதை நம்ப வேண்டாம். தகுதியின் அடிப்படையி்ல் மட்டுமே வேலை வழங்கப்படும்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக