எஸ்ஐஆர் படிவத்தில் வாக்காளர் நிரப்ப வேண்டியது என்ன? சந்தேகங்களும் பதில்களும்




தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

2002-2005 காலகட்டத்தில் நடந்த எஸ்ஐஆருக்கு பிறகு வெளியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாக வைத்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் 2002-ஆம் ஆண்டு 197 தொகுதிகளிலும் 2005-ஆம் ஆண்டு 37 தொகுதிகளிலும் எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டு படிவங்களை இணையம் மூலமாகவும் சமர்ப்பிப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடைசியாக 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் 68,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாக்குச்சாவடி அலுவலர் (பி.எல்.ஓ) உள்ளார்.

எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்கள் தொடர்பாக சில கேள்விகளும் சந்தேகங்களும் வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்படுகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவம் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டுப் படிவம் தொடர்பாக உள்ள சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் பற்றி இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர் (பி.எல்.ஓ), வாக்குச்சாவடி முகவர் (பி.எல்.ஏ) மற்றும் பொதுமக்களுடன் பிபிசி தமிழ் பேசியது.

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள்

எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டு படிவத்தை டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தற்போது வாக்குச்சாவடி அலுவலர் (பி.எல்.ஓ) மற்றும் வாக்குச்சாவடி முகவர் (பி.எல்.ஏ) ஆகியோர் உதவியுடன் கணக்கீட்டு படிவங்கள் வீடுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

வாக்காளர்களுக்கு உதவி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க தேர்தல் ஆணையம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சில அரசியல் கட்சிகளும் கூட உதவி எண்களை அறிவித்துள்ளது.

கணக்கீட்டு படிவத்தில் வாக்காளரின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி, சட்டப்பேரவைத் தொகுதி, பாகம் எண் மற்றும் வரிசை எண் உள்ளிட்ட விவரங்கள் ஏற்கெனவே நிரப்பப்பட்டு வழங்கப்படுகிறது.

வாக்காளர் நிரப்ப வேண்டிய விவரங்கள்:

  • பிறந்த தேதி
  • ஆதார் எண் (விருப்பத்தேர்வு)
  • கைப்பேசி எண்
  • தந்தை/பாதுகாவலரின் பெயர்
  • தந்தையின் வாக்காளர் அடையாள அட்டை எண்
  • தாயாரின் பெயர்
  • தாயாரின் வாக்காளர் அடையாள அட்டை எண் (இருப்பின்)
  • துணைவர் பெயர் (இருப்பின்)
  • துணைவர் வாக்காளர் அடையாள அட்டை எண் (இருப்பின்)
வீடுகளில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கணக்கீட்டு படிவங்கள்

வாக்காளர்களுக்கு வீடுகளில் விநியோகிக்கப்படும் படிவங்களில் தாயாரின் வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் துணைவர் குறித்த விவரம் கட்டாயம் நிரப்ப வேண்டும் எனக் குறிப்பிடவில்லை. ஆனால் தந்தை அல்லது பாதுகாவலரின் பெயர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றுள்ளது

ஆனால் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த பதிவில் தந்தையின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் கட்டாயம் இல்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தந்தை மற்றும் தாயின் பெயர் மட்டுமே கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என்று இருந்தது.




தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியின் படியும் முதல் கட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் இருந்தால் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதற்கு கீழே இரண்டு கட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் முந்தைய எஸ்.ஐ.ஆருக்குப் பிந்தைய வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளரின் விவரங்கள் ஒரு கட்டத்திலும் வாக்காளரின் உறவினரின் விவரங்கள் இன்னொரு கட்டத்திலும் கேட்கப்பட்டுள்ளன.

கணக்கீட்டு படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களை புரிதலுக்காக முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டம் என வைத்துக் கொள்வோம்.

தற்போது எஸ்.ஐ.ஆர் பணிகளில் வாக்காளர்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றனர். ஒன்று 2002-2005 எஸ்ஐஆருக்குப் பிந்தைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், இரண்டாவது அதில் இடம்பெறாதவர்கள்.

கணக்கீட்டுப் படிவத்தில் முதல் கட்டத்தை அனைவருமே நிரப்ப வேண்டும்.

2002-2005 எஸ்.ஐ.ஆருக்கு பிந்தைய பட்டியலில் இடம்பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பிரிவினர் முதல் கட்டத்தை நிரப்பியதோடு இரண்டாவது கட்டத்தில் 2002-2005 எஸ்.ஐ.ஆருக்கு பிந்தைய வாக்காளர் பட்டியலில் உள்ள சட்டமன்ற தொகுதி, வாக்காளர் அடையாள அட்டை எண், பாகம் எண் மற்றும் வரிசை எண் உள்ளிட்ட விவரங்களை நிரப்ப வேண்டும்.

கடந்த 25 வருடங்களில் முகவரி அல்லது வாக்குச்சாவடி மாறாதவர்களுக்கு இதில் சிக்கல் எழுவதில்லை. ஆனால் 2005-க்குப் பிறகு இடம்பெயர்ந்தவர்கள், முகவரி மாறியவர்களுக்கு பழைய தகவல்களை எடுப்பதில் சிக்கல் எழுகிறது.


முந்தைய வாக்காளர் பட்டியல் விவரங்களை எங்கே தெரிந்து கொள்வது?

2002-05 எஸ்ஐஆருக்குப் பிந்தைய வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்களை இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் மூலம் விவரங்களைப் பெறலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை எண் இல்லையென்றாலும் வாக்காளர் பெயர் மற்றும் வாக்காளர் பட்டியலை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களில் என்ன தகவல்களை நிரப்புவது எனத் தெரியவில்லை என்று திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் தெரிவித்தார்.

வாக்காளர் அடையாள அட்டை எண் இருந்தால் வாக்குச்சாவடி அலுவலர்களே (பி.எல்.ஓ) இந்த தகவல்களை இணையத்தில் தேடி நிரப்பிக் கொள்வார்கள் என பெயர் குறிப்பிட விரும்பாத வாக்காளர் பதிவு அலுவலர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

திருப்பூரில் அதே வாக்குச்சாவடி நிலை அலுவலரைத் தொடர்பு கொண்டு வாக்காளர்கள் எழுப்பும் சந்தேகங்களை பிபிசி முன்வைத்தது.

பெயர் குறிப்பிட விரும்பாமல் அதற்குப் பதிலளித்த அவர், "இப்போதைக்கு படிவங்களை விநியோகிப்பதில் தான் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளோம். எங்களுக்கும் சில சந்தேகங்கள் உள்ளன. வாக்காளர்கள் அவசரப்பட வேண்டாம். இன்னும் கால அவகாசம் உள்ளது. படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து பெறுவது பற்றி எங்களுக்கு மேலும் ஒரு பயிற்சி நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் இந்த சந்தேகங்கள் தீர்ந்து விடும்." எனத் தெரிவித்தார்.

2005-க்குப் பிறகு பதிவு செய்த வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்?

2002 - 2005 எஸ்.ஐ.ஆருக்கு பிந்தைய வாக்காளர் பட்டியலை அடிப்படையாக வைத்து தான் தற்போதைய பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு பிறகு வாக்காளராக பதிவு செய்தவர்கள், முதல் கட்டத்தில் தங்களின் விவரங்கள் மற்றும் தங்களின் பெற்றோரின் விவரங்களை நிரப்ப வேண்டும்.

இந்த வாக்காளர்கள் இரண்டாவது கட்டத்தை நிரப்பத் தேவையில்லை எனக் கூறிய பி.எல்.ஓ ஒருவர், "அதன் பிறகு மூன்றாவது கட்டத்தில் பெற்றோர் யாராவது ஒருவரின் விவரத்தை நிரப்பினால் போதுமானது." என்றும் தெரிவித்தார்.

தாய், தந்தையின் வாக்காளர் அட்டை விவரம் இல்லாதவர்கள் என்ன செய்யலாம்?

2005-க்குப் பிறகு பதிவு செய்தவர்களிடம் தாய் மற்றும் தந்தையின் வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்கள் இல்லையென்றால் தங்கள் துணைவரின் தற்போதைய விவரங்களை மட்டும் பூர்த்தி செய்தால் போதுமானது என பி.எல்.ஓ ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தப் படிவத்தில் உறவினர் என்பதன் கீழ் உறவினரின் பெயர் மற்றும் உறவு முறை பற்றிய விவரங்கள் 2வது மற்றும் 3வது கட்டங்களில் கேட்கப்பட்டுள்ளன. இந்த உறவினர் யார் என்பது தொடர்பாகவும் வாக்காளர்களுக்கு கேள்விகள் இருந்தன. குடும்ப உறுப்பினரா அல்லது உறவு முறையில் உள்ள எவர் ஒருவரின் விவரங்களையும் வழங்கலாமா என்கிற கேள்வியையும் முன்வைக்கின்றனர்.

உறவினர் என்பது யார்?

TN CEO

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியின்படி, வாக்காளர்கள் படிவத்தில் கீழே கொடுக்கப்பட்ட கட்டங்களில் தங்களின் விவரங்கள் அல்லது உறவினர்களின் விவரங்களை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

அதில், "முந்தைய பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் தங்களின் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி ஆகியோரின் விவரங்களை வழங்க வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் எவ்வாறு சமர்ப்பிக்கலாம்?

எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டு படிவத்தை இணையத்திலும் சமர்ப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால் எஸ்ஐஆர் பணிகள் தொடங்கிய பின்னரும் தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் அந்த வசதி இடம்பெறாமல் இருந்தது.

சமீபத்தில் அதற்கென பிரத்யேக பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் அலைபேசி எண்ணை உள்ளிட்டு பதிவிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வாக்காளர் அட்டையில் உள்ள பெயரும் ஆதார் அட்டையில் உள்ள பெயரும் பொருந்திப் போக வேண்டும் என்றும் அப்படியில்லை என்றால் வாக்குச்சாவடி அலுவலரை தொடர்பு கொண்டு கணக்கீட்டு படிவத்தை நேரிலே சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டையிலும் ஆதார் அட்டையிலும் பெயர் பொருந்திப் போனால் அவர்கள் தங்களின் அலைபேசி எண்ணை பதிவு செய்து மற்ற விவரங்களையும் உள்ளிட்டு இணையத்தில் சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Home

Previous Post Next Post