2021 புத்தாண்டு ராசி பலன்கள் – கடக ராசி | New Year Rasi Palan 2021 Kadagam Tamil | New Year Rasi Palan Kadagam 2021 Tamil

 

2021 புத்தாண்டு ராசி பலன்கள் – கடக ராசி


2020 முடியும் நிலையில் அடுத்து வரும் 2021ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். சனி பகவான் ஏழாம் வீட்டிலும், ராகு மற்றும் கேது முறையே ஐந்து மற்றும் மூன்றாவது வீட்டிலும் இருப்பார்கள். ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் கிரகம் பத்தாவது வீட்டிலும், பின்பு அடுத்தடுத்த வீடுகளிலும் பெயர்ச்சி ஆகிறார். இந்த கிரக அமைப்பில் இருப்பதால் உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் அதிர்ஷ்டம் உண்டாக போகிறது.

குடும்பம்:

குடும்பத்தை பொறுத்தவரை கடக ராசிக்காரர்கள் நிறைய சவால்களை எதிர் கொள்வீர்கள். சனி பகவானுடைய பார்வை உங்களது ராசியில் இருந்து நான்காவது வீட்டை நோக்கி இருப்பதால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் மற்றும் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சிறு விஷயத்தை கூட, வாக்குவாதங்கள் செய்து, பேசி பேசியே பெரிதாக்கி விடுவார்கள். கூடுமானவரை வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. செவ்வாய் பகவானுடைய பார்வையும் நான்காம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இல்லாமல் மற்றவர்களின் கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுத்தால் நல்லது நடக்கும்.

வியாபாரம் மற்றும் தொழில்:

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், சிறப்பான வேலை வாய்ப்பும் அமையலாம். ஆண்டின் தொடக்கத்தில் மற்றும் இறுதியிலும் அனுகூலமான பலன்களை கொடுத்தாலும், நடுப்பகுதியில் இருக்கும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலம் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த போட்டி, பொறாமைகள் குறைந்து முன்னேற்றத்திற்கு நல்ல வழி கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்து அதிக லாபங்களை காண்பீர்கள்.

உத்தியோகம்:

கடக ராசிக்காரர்களுக்கு உத்தியோக ரீதியான விஷயத்தில் அதிகம் நிதானத்துடன் இருக்க வேண்டிய காலமாக அமையும். பணியில் இருப்பவர்களுக்கு கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் கவனம் தேவை. ஆண்டின் தொடக்கத்தில் சுமூகமாக சென்றாலும், பின்வரும் காலங்களில் வம்பு வழக்குகளையும், வாய்த் தகராறுகளையும் எதிர்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. வீண் பழியை சுமப்பதற்கு சந்தர்ப்பங்கள் அமையலாம். எனவே எச்சரிக்கையுடன் செயலாற்றுவது மிகவும் நல்லது. எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.

பொருளாதாரம்:

பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். அதிகம் வரும் பணத்தை எல்லாம் பத்திரப்படுத்தி வைக்காமல் உபயோகமான விஷயங்களை செய்வதும், வங்கிகளில் டெபாசிட் செய்து வைப்பதும், வீடுமனை போன்ற அசையா சொத்துக்களை வாங்குவதும் நல்ல பலன் தரும். அரசாங்கத் துறையில் வரவேண்டிய பலன்களும் அனுகூலமாக இருக்கும். நிலுவையில் இருக்கும் கடன்கள் படிப்படியாக குறைந்து விடும்.

பெண்களுக்கு:

கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு எதிர்பார்த்த சுபகாரியங்கள் கைகூடி வரும். மனதிற்கு பிடித்தவர்களை மணமுடியும் வாய்ப்புகள் உண்டாகும். எதையும் போராட்டத்தை சந்தித்த பின் தான் வெற்றி கிடைக்கும். போராடுவதற்கு முதலில் மனோதிடத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் வெறுப்புகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை நீடிக்க திட்டம் தீட்டுவீர்கள். நண்பர்களின் ஆதரவு பக்கபலமாக இருக்கும்.

பரிகாரம்:

கடக ராசியில் பிறந்தவர்கள் கணபதியை வழிபட்டு வர நன்மைகள் பிறக்கும். உங்களுக்கு வரக்கூடிய நோய்கள் தீர குரு பீஜ மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். செவ்வாய்க்கிழமை தோறும் கோவிலுக்கு சென்று செவ்வாய் பகவானுக்கு சிவப்பு நிற மலர்களை சாற்றி, வழிபாடுகள் செய்து வரவும். சிவப்பு நிற தானியங்களை தானம் செய்தால் யோகம் பெறலாம். வரவிருக்கும் 2021 ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

x

Related Posts

கருத்துரையிடுக